சத்தியமங்கலத்தில் பழமையான பவானீஸ்வரர் கோவில் மதில்சுவர் இடிந்து விழுந்தது

சத்தியமங்கலத்தில் பழமையான பவானீஸ்வரர் கோவிலில் மதில் சுவர் இடிந்து விழுந்தது.

Update: 2020-03-10 22:45 GMT
சத்தியமங்கலம், 

சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் கரையோரம் பழமையான பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்போதும் பக்தர்கள் வந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, கோவில் மதில்சுவரை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் சுமார் 20 அடி நீளத்துக்கு மதில் சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் கோவிலை சுற்றி சாமி ஊர்வலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்தார்கள். அதன்பின்னர் கான்கிரீட் மதில் சுவரை கட்ட ரூ.53 லட்சம் ஒதுக்கப்பட்டது. கடந்த 3 மாதமாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கோவில் நடையை குருக்கள் திறந்தார். அப்போது 'டம்ம்' என்ற சத்தம் கேட்டது. உடனே குருக்கள் சத்தம் வந்த பக்கம் ஓடிப்பார்த்தார். அப்போது ஏற்கனவே 20 அடி தூரத்துக்கு விழுந்திருந்த மதில் சுவர் அதில் இருந்து மேலும் சுமார் 60 அடி தூரத்துக்கு இடிந்து ஆற்றில் விழுந்தது. சுவர் விழுந்த பக்கம்தான் 63 நாயன்மார்களின் சிலைகள் பீடத்துடன் இருந்தன. அந்த சிலைகளும் சுவருடன் பவானி ஆற்றுக்குள் விழுந்தன.

இதுபற்றி குருக்கள் உடனே கோவில் நிர்வாக அதிகாரி சித்ராவுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து பார்த்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோவிலுக்கு ெசன்று பார்வையிட்டார்கள்.

மேலும் இதுபற்றி சென்னையில் இருக்கும் பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை சந்தித்து, கோவில் மதில்சுவரை விரைந்து கட்டிக்கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சத்தியில் பழமையான பவானீஸ்வரர் கோவில் மதில் சுவர் இடிந்து விழுந்தது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்