விவசாயிகள் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

Update: 2020-03-10 22:15 GMT
விருதுநகர், 

விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு பண்ணை செலவு மற்றும் கூடுதல் மூலதனம் ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் குறைந்த வட்டியில் விவசாய கடன் அட்டையை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே விவசாய கடன் அட்டை பெற்றுள்ள பயனாளிகள் தங்கள் பண்ணை செலவுக்கு கூடுதலாக மிக குறைந்த வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம்.

புதிதாக விவசாய கடன் அட்டை பெறுவோர் ரூ.2 லட்சம் வரை கூடுதல் மூலதன செலவாக விவசாய கடனை பெற்றுக்கொள்ளலாம். கிராமங்களில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர் சொந்த நிலம் இல்லாதவர்களாக இருந்தாலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். இதற்காக பிணையம் அளிக்க தேவையில்லை.

விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் மூலமாக தங்கள் தேவைக்கேற்ப பணத்தை கடன் அட்டை மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் ரூ.2 லட்சம் வரை கடன் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் தான் பணம் எடுக்கின்ற தொகைக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். இதன் காரணமாக அதிக வட்டி யில் இருந்து விவசாயிகள் தங்களை காத்துக்கொள்ள இத்திட்டம் உதவியாக இருக்கிறது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து தங்களது பகுதி கால்நடை உதவி மருத்துவரிடம் வழங்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி இருப்பின் வங்கி விதிகளுக்கு உட்பட்டு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்