பெரியகுளத்தில், வெடி தயாரித்த போது பயங்கரம்; தாய்-மகள் உடல் கருகி பலி - 50 குழந்தைகள் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பெரியகுளத்தில் வெடி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் தாய்-மகள் உடல் கருகி பலியானார்கள். 50 குழந்தைகள் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2020-03-11 23:30 GMT
பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 45). இவர்களுக்கு ரவி (22) என்ற மகனும், நிவிதா (18) என்ற மகளும் இருந்தனர். கோபிநாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

ரவி தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். பாண்டியம்மாள், தனது மகள் நிவிதாவுடன் தனது வீட்டில் அனுமதி பெறாமல் ‘பேப்பர் பட்டாசு‘ என்று அழைக்கப்படும் நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்த வெடிகளை திருவிழாக்கள் மற்றும் திருமணம், காதணி விழா போன்ற விசே‌‌ஷங்களுக்கு பெரியகுளம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் இருந்தும், மதுரை, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து வாங்கி சென்றுள்ளனர். சிலர் மொத்தமாக முன்பதிவு செய்தும் வெடிகளை வாங்கி செல்வது உண்டு. பாண்டியம்மாள் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதியில் தகர மேற்கூரையாலும், மற்றொரு பகுதி ஓடுகளாலும் அமைக்கப்பட்டு இருந்தன.

நேற்று ரவி வேலைக்கு சென்று விட்டார். பிற்பகல் 12.30 மணியளவில் பாண்டியம்மாளும், அவருடைய மகளும் வீட்டின் ஒரு பகுதியில் வெடிகளை தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது பாண்டியம்மாள் வீட்டின் தகர மேற்கூரை வானத்தை நோக்கி பறந்தது. ஓடுகளும் நாலாபுறமும் சிதறின. தொடர்ந்து சுமார் 5 நிமிடங்களுக்கு அவருடைய வீட்டில் இருந்து பலத்த சத்தத்துடன் வெடிகள் வெடித்துக் கொண்டே இருந்தன.

இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. வானை நோக்கி பறந்த தகர மேற்கூரை வீட்டில் இருந்து சுமார் 30 அடி தூரம் தள்ளி போய் விழுந்தது. வெடிகள் வெடித்து சிதறியதில் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. வீட்டில் இருந்து பறந்த நெருப்பு அருகில் உள்ள சவுந்தரபாண்டியன் என்பவரது வீட்டின் கூரையில் தீப்பிடித்தது.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் தான் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் பெரியகுளம் போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது. இதனால் சத்தம் கேட்டு போலீசார் அங்கு ஓடி வந்தனர். தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கூரையில் எரிந்த தீயை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படைவீரர்கள் அணைத்தனர். சம்பவம் நடந்த வீட்டுக்குள் போலீசார் சென்று பார்த்தபோது, அங்கு தயாரித்து வைத்து இருந்த வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அப்போது வீட்டின் ஒரு ஓரத்தில் பாண்டியம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். மற்றொரு பக்கத்தில் நிவிதா உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, அவரை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த வெடி விபத்தில் பாண்டியம்மாள் வீட்டின் அருகில் உள்ள மல்லிகா, உமா ஆகியோரின் வீடுகளும் சேதம் அடைந்தன. பாண்டியம்மாள் வீட்டுக்கு அடுத்துள்ள ஒரு கட்டிடத்தில் அங்கன்வாடி மையமும், அதற்கு அடுத்த கட்டிடத்தில் தனியார் பள்ளியும் செயல்படுகிறது. இந்த வெடி விபத்து நடந்த போது அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகளும், தனியார் பள்ளியில் 30 குழந்தைகளும் இருந்தனர்.

வெடி சத்தம் கேட்டு, அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளியில் இருந்த குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பயத்தால் அவர்கள் அலறினர். குழந்தைகள் இருந்த கட்டிடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இதனால் குழந்தைகள் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரில் வந்து பார்வையிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சம்பவம் குறித்து அவர் விசாரணை நடத்தினார். மேலும், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்