வாணாபுரம் அருகே, விவசாயி வீட்டில் 40 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வாணாபுரம் அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-03-11 22:45 GMT
வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே உள்ள காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மனைவி படவேட்டம்மாள் (வயது 60), விவசாயி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் இறந்துவிட்டார். இந்த நிலையில் படவேட்டம்மாள், அவரது இளைய மகள் ஜெயக்கொடி மற்றும் மருமகள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

படவேட்டம்மாள் மற்றும் ஜெயக்கொடி ஆகியோர் நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு சென்று இருந்தனர். இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு வந்த அவர்கள் வேலை களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலை புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், படவேட்டம்மாள் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அப்பகுதியில் மறைத்து வைத்துவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று அங்கு 3 அறைகளில் தனித்தனியாக இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.10 லட்சமும், 40 பவுன் நகையும் அள்ளிச் சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்