மாணவனுக்கு கொரோனா பாதிப்பு: அரக்கோணம் மக்கள் பீதி அடைய வேண்டாம்; கலெக்டர் தகவல்

அரக்கோணம் மாணவனுக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவலால் அரக்கோணம் மக்கள் எந்த பீதியும் அடைய வேண்டாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-13 22:30 GMT
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– 

வாலாஜாவில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது உருவாக்கப்பட்டது அல்ல, கடந்த 6 மாதங்களாக தனி வார்டு இயங்கி வருகிறது. சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அந்த வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர காய்ச்சல், கொரானோ உள்பட வேறு நோய் அறிகுறிகள் நோயாளிகளிடம் தென்பட்டால் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்ப கூறி தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லாமல் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை வாட்ஸ்அப், முகநூலில் பரப்பக்கூடாது. மக்கள் இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்.

சமூக வலைதளங்களில் அரசு அறிவிப்பில்லாமல் கொரோனா வைரஸ் குறித்து பகிரப்படும் வதந்திகளை கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரக்கோணத்தில் ஒரு மாணவனுக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பரவியுள்ளது. அந்த மாணவனுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அந்த மாணவனுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் எந்த வகையான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும். அதுவரை உறுதியாக எதுவும் கூறமுடியாது.

ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவுகள் இன்று அல்லது நாளை வரும். அதுவரை அவரை மற்ற பொதுமக்கள், நோயாளிகளுடன் வைக்காமல் தனி வார்டில் வைத்து பராமரிக்கப்படுவார். இதனால் அரக்கோணம் மக்கள் எந்த பீதியும் அடைய வேண்டாம். பொதுமக்கள் பொதுவாக சுத்தமாக இருந்தால் போதுமானது. கைகழுவும் முறைகள் பற்றி தெரிந்துக்கொண்டு கைகளை கழுவி சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது. எந்த பதற்றமான சூழ்நிலையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்