அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்

சூரை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-03-13 22:15 GMT
சோளிங்கர், 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சூரை கிராமத்தில் 2018-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் 2.67 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தொடர்ந்து மாவட்ட அளவில் 100 சதவீத தேர்ச்சி பெறுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி கலந்துகொண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி விருதுகள் வழங்கினார்.

இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் பள்ளி கட்டிடம் அருகே உள்ள இடங்கள் வெட்டவெளியாக உள்ளது. இரவு நேரங்களில் மது அருந்துவது மற்றும் சமூகவிரோத செயல்களை சிலர் செய்து வருகின்றனர். மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி உடைத்து விட்டு செல்கின்றனர். காலையில் பள்ளி வளாகத்தில் இருந்து மதுபாட்டில்களையும், அசுத்தங்களையும் வெளியே எடுத்து போடும் நிலை உள்ளது.

பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இப்பகுதி மக்கள் ஒரு சிலர் பள்ளிக்கு அருகிலேயே மாடுகளை கட்டி உள்ளனர். மேலும் கொட்டாய் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் பள்ளி சுற்றுப்புற பகுதிகளில் விவசாய நிலங்கள் உள்ளதால் பள்ளிக்குள் பாம்புகள் மற்றும் வி‌‌ஷபூச்சிகள் வருகின்றன. இதனால் மாணவ- மாணவிகள் பயப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பள்ளியை சுற்றி செடிகள் வைக்கப்பட்டு இருந்தது. சுற்றுச்சுவர் இல்லாததால் ஆடு, மாடுகள் செடிகளை மேய்ந்து விட்டதால் தற்போது ஒரு செடி கூட அங்கு இல்லை. எனவே, இந்த பள்ளியை சுற்றி 550 மீட்டர் சுற்றளவு கொண்ட சுற்றுச்சுவரை அரசு கட்டித் தரவேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கி சிமெண்டு ‌ஷீட் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்