கவர்னர் மாளிகை மூலம் 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு; கிரண்பெடி தகவல்

புதுவையில் கவர்னர் மாளிகை மூலம் 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-02 00:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியின் கவர்னராக கிரண்பெடி பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி கவர்னர் மாளிகையில் இதுவரை நடந்துள்ள பணிகள் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 4 ஆண்டுகளாக கவர்னர் மாளிகை, அரசு அதிகாரிகள், பொதுமக்களுடன் ஒன்றிணைந்து அனைத்து பிராந்தியங்களிலும் பணியாற்றியுள்ளது. 5-ம் ஆண்டு தொடக்கத்தை புதியவழி மக்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இணையவழி தொடர்பு, காணொலி காட்சி என மத்திய அரசின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுகின்றது.

கவர்னர் மாளிகை விழாக்கள் அனைத்தும் மத்திய அரசன் வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. ஊரடங்கு காலத்திலும் கவர்னர் மாளிகையை மக்கள் எளிதாக அணுகும்படி தொலைபேசி, வாட்ஸ் அப், மின்னஞ்சல், கட்டுப்பாட்டு அறை எண்கள் ஆகியவற்றின் மூலம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நேரில் சந்திப்புகள் நடைபெறும் என நம்புகிறேன்.

கடந்த 4 ஆண்டில் புதுவை கவர்னர் மாளிகையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குறை மற்றும் புகார்களை பெற்று கவனித்து தீர்வு காணப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையுடன் இணைந்து செயல்பட்டு வரும் அனைவருக்கும் உரிய அறிவுரைகளை வழங்கியதற்கும் கவர்னர் மாளிகை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்