குடிநீர் தட்டுப்பாடு: வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

தர்மபுரி மாவட்டம் பந்தாரஅள்ளி ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

Update: 2020-06-05 02:04 GMT
காரிமங்கலம்,

குடிநீர் தட்டுப்பாட்டிற்கு உரிய தீர்வு காணவேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இருந்தபோதிலும் குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்தது.

இந்தநிலையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தண்டபாணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பந்தாரஅள்ளி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்