திருமுல்லைவாயல் அருகே மீன் மார்க்கெட் தொழிலாளி வெட்டிக்கொலை - மனைவி கண் எதிரிலேயே பயங்கரம்

திருமுல்லைவாயல் அருகே மனைவி கண் எதிரிலேயே மீன் மார்க்கெட் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-06-05 22:56 GMT
ஆவடி,

திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம், அன்னை அஞ்சுகம் நகர், பாட்டாளி குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 31). இவர், சென்னை சென்டிரல், வானகரம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் லோடு ஏற்றி, இறக்கும் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உஷா (28). இவர்களுக்கு சுஜித் (8) என்ற ஒரு மகன் உள்ளான்.

நேற்று காலை வீட்டில் இருந்த பாண்டியனை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பாண்டியன் என்பவர் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்துச்சென்றார். அவருக்கு பின்னால் உஷாவும் சென்றார். சிறிது தூரம் சென்ற பிறகு லேபர் தெருவில் தயாராக நின்ற ரவுடி பன்னீர், கார்த்திக், சிவலிங்கம் ஆகியோருடன் பாண்டியனும் சேர்ந்து மீன் மார்க்கெட் தொழிலாளி பாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, கழுத்து, காது உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பாண்டியன், தனது மனைவி கண் எதிரிலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தன் கண் முன்னே கணவர் வெட்டிக்கொலை செய்யப்படுவதை கண்ட உஷா கதறினார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் ஓடிவந்தனர். அதற்குள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் கொலையான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கடந்த 3ந்தேதி இரவு கொலையான பாண்டியனின் மாமா சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் காலால் உதைத்து கீழே தள்ளினார். இதையடுத்து பாண்டியன், அவரது மாமா சக்திவேல் இருவரும் கார்த்திக் வீட்டிற்கு சென்று இதுபற்றி தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளார். உடனே அவர், சக்திவேலுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில்தான் நேற்று காலை பாண்டியனை வீட்டுக்கு வந்து அழைத்துச்சென்று கொலை செய்தது தெரிந்தது.

கொலையான பாண்டியன் மீது ஏற்கனவே பீர்க்கன்கரணை போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கும், அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஆள் கடத்தல் வழக்கும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்