970 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் நீலோபர் கபில் வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 970 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நீலோபர் கபில் வழங்கினார்.

Update: 2020-06-06 01:40 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தலா ரூ.2 ஆயிரம் மதிப்பில் பதிவுபெற்ற 970 கட்டுமான தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 5 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால், கலெக்டர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் தொழிலாளர் ஆணையர் செந்தில்குமாரி வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நீலோபர் கபில் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 43,495 கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கும், 745 ஓட்டுனர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் அரிசி பருப்பு எண்ணெய் அடங்கிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கட்டுமான நல வாரியம், ஓட்டுனர் நல வாரியம், அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்கள் மொத்தம் 49 ஆயிரத்து 418 பேருக்கு ரூ.9 கோடியே 88 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.பி.க்கள் அசோக்குமார், சி.பெருமாள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் எஸ்.எம்.மாதையன், சூளகிரி ஒன்றிய குழுத்தலைவர் லாவண்யா ஹேம்நாத், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் எஸ்.தென்னரசு, சோக்காடி ராஜன், ஜெய்பால், பால்ராஜ், எம்.பி.இளஞ்சூரியன், அரசு வழக்கறிஞர் ராதா கார்த்திக், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொழிலாளர் இணை ஆணையர் எல்.ரமேஷ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்