ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை: இயல்பு நிலைக்கு திரும்பாத மசினகுடி வருமானமின்றி வாடகை ஜீப் டிரைவர்கள், வியாபாரிகள் தவிப்பு

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால் மசினகுடி இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. மேலும் வருமானமின்றி வாடகை ஜீப் டிரைவர்கள், வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

Update: 2020-06-07 23:34 GMT
கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 5-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி சில கட்டுப்பாடுகளுடன் அரசு பஸ்கள், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் சுற்றுலா தலங்களை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடி கிடக்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இது தவிர தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. இதுபோன்ற காரணங்களால் நீலகிரியில் சுற்றுலா தொழில் முடங்கி கிடக்கிறது.

சுற்றுலா தொழில்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முதுமலை புலிகள் காப்பகம் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு ஆண்டுதோறும் கோடை சீசனில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். அப்போது யானை சவாரி, வாகன சவாரி நடைபெறும். கோடை சீசன் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் சவாரி நடைபெறுவதும் உண்டு. இதனால் முதுமலைக்கு வர சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இத்தகைய முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி மசினகுடி ஊராட்சி பகுதி உள்ளது. இங்கு தங்கும் விடுதிகள் அதிகளவில் உள்ளன. 

மேலும் சுற்றுலா பயணிகளை முதுமலைக்கு அழைத்து செல்வதற்காக 200-க்கும் மேற்பட்ட வாடகை ஜீப்புகள் இயக்கப்படுகிறது. இது தவிர ஏராளமான கடைகள் உள்ளன. இதன் காரணமாக மசினகுடி ஊராட்சி பகுதி மக்கள் பெரும்பாலானோர் சுற்றுலா தொழிலை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர் என்றே கூறலாம்.

வெறிச்சோடிய மசினகுடி

ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவால் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு உள்ளது. இதனால் முதுமலை, மசினகுடி பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் ஊட்டி, கூடலூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து உள்ளது. ஆனால் மசினகுடி பகுதி மட்டும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. சுற்றுலா தொழில் முடங்கி கிடப்பதால், வாடகை ஜீப் டிரைவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இது தவிர வியாபாரம் இன்றி வியாபாரிகளும் தவித்து வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வருமானமின்றி தவிப்பு

இதுகுறித்து மசினகுடி வாடகை ஜீப் டிரைவர்கள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டாலும், சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் நீலகிரிக்குள் வர சுற்றுலா பயணிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் மசினகுடியில் வாடகை ஜீப்புகள் இயக்கப்படவில்லை. 

வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து இருந்தாலும், வியாபாரம் ஆவதில்லை. சுற்றுலா தொழில் அடியோடு முடங்கி கிடப்பதால், வருமானமின்றி தவிக்கிறோம். சுற்றுலா தலங்களை திறந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அப்போதுதான் மசினகுடியில் இயல்பு நிலை திரும்பும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்