சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? மாநகராட்சி முழுவதும் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என மாநகராட்சி முழுவதும் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2020-06-08 06:17 GMT
வேலூர்,

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததையடுத்து கடைகள் பல திறக்கப்பட்டன. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா?, கடைக்காரர்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா? போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையில் 4 மண்டலங்களிலும் 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகமான மக்கள் இறைச்சி கடைகளுக்கு படையெடுத்தனர். இறைச்சி கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பல கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது. பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு இறைச்சிகளை வாங்கிச் செல்வதை காணமுடிந்தது.

அதிகாரிகளின் ஆய்வினால் பல கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 4-வது மண்டலத்தில் கமிஷனர் சங்கரன் தலைமையில் சுகாதார அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கொணவட்டம், அரியூர், தொரப்பாடி, மாங்காய்மண்டி, வசந்தபுரம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. பணிபுரிபவர்கள் முகக் கவசம் அணியவில்லை.

குறிப்பாக இறைச்சி கடைகளில் அதிக மக்கள் கூட்டம் இருந்தது. சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்தப்பட்டிருந்தது. ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். அதன்படி ரூ.40 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. 1 மளிகைக்கடை மூடப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

3-வது மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் விருப்பாட்சிபுரம், குட்டை மேடு வேலப்பாடி, சங்கரன்பாளையம் போன்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 25 கடைகளில் மேற்கொண்ட ஆய்வின் முடியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது, முகக் கவசம் அணியாதது என 20 கடைகளுக்கு ரூ.19 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர்.

இதேபோல 2-வது மண்டலத்தில் உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் சத்துவாச்சாரி பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர். ஒரு மளிகைக்கடை, கோழி இறைச்சி கடை மூடப்பட்டன. 17 கடைகளுக்கு ரூ.51 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது. அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே சிலர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் காய்கறி கடைகள் வைத்திருந்தனர். அந்தக் கடைகளை அப்புறப்படுத்தினர்.

1-வது மண்டலத்தில் உதவி கமிஷனர் செந்தில் தலைமையில் சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43 கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விதிகளை மீறியதாக ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு கோழி இறைச்சி கடையில் எந்த வித விதிமுறையும் பின்பற்றப்படாததால் அந்தக் கடையை அதிகாரிகள் மூடினர். 4 மண்டலங்களையும் சேர்த்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 900 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை தொடரும் எனவும் கமிஷனர் சங்கரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்