விக்கிரவாண்டி அரசு மருத்துவமனைக்கு ‘சீல்’

கொரோனாவால் பெண் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக விக்கிரவாண்டி அரசு மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2020-06-09 04:24 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள தென்பேர்புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 56 வயது பெண் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக இவருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே, விக்கிரவாண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை சீராகாததால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து நேற்று சுகாதார துறை இணை இயக்குனர் சண்முககனி, துணை இயக்குனர் மணிமேகலை ஆகியோர் விக்கிரவாண்டி தாலுகா மருத்துவ மனைக்கு வந்து ஆய்வு செய்தனர். அங்கிருந்த மருத்துவ அலுவலர் அப்துல் அக்கீமிடம் விபரங்களை கேட்டறிந்தனர் .

பின்னர் விக்கிரவாண்டி பேரூராட்சியிலிருந்து தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ மனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவ மனையை மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர். மேலும் அரசு மருத்துவ மனையில் பணி புரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர், பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏதும் உள்ளதா என பரிசோதனை செய்யப்படவும் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்