சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வந்த புதுமாப்பிள்ளைக்கு கொரோனா ; மனைவி உள்பட 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா தொகரப்பள்ளியை சேர்ந்த 24 வயது வாலிபருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்றார்.

Update: 2020-06-11 02:39 GMT
கிருஷ்ணகிரி,

புதுமாப்பிள்ளை, கடந்த 30-ந்தேதி மீண்டும் ஊருக்கு திரும்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் அந்த வாலிபர் உள்பட 4 பேரின் சளி, ரத்த மாதிரியை சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி உள்பட 3 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

இதைத்தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவருடைய மனைவி உள்பட 3 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொகரப்பள்ளி பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தூய்மை காவலர்கள், சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தொகரப்பள்ளி வழித்தடத்தில் போச்சம்பள்ளி நகர பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் நேற்று மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்