ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகள் வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2020-06-11 22:46 GMT
ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அத்தியாவசிய கடைகள் மட்டுமின்றி அனைத்து தனிக்கடைகளும் திறந்து செயல்பட்டு வருகிறது. வீடுகளில் முடங்கி இருந்த பொதுமக்கள் அதிகம் பேர் வெளியே வந்து செல்கின்றனர். இதனால் ஊட்டி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையோரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழக்கம்போல் நிறுத்தப்பட்டு வருகின்றன.

சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகள்

இதற்கிடையே ஊட்டி கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, புளுமவுண்டன் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட சாலைகளில் மாடுகள், குதிரைகள் போன்றவை சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றன. அவை சாலை நடுவே நீண்ட நேரம் நின்றபடி ஓய்வெடுப்பதை காண முடிகிறது. மேலும் அசுத்தம் செய்வதால் வாகன ஓட்டிகள் முகம் சுளிக்கின்றனர்.

சமீபகாலமாக குதிரைகள் எண்ணிக்கை அதிகரித்து சாலையில் உலா வந்து கொண்டு இருக்கின்றன. இவை குட்டிகளுடன் சாலைகளில் சுற்றுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஒரே இடத்தில் நிற்பதாலும், படுத்துக்கொள்வதாலும் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

கடும் நடவடிக்கை

வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியும் வழி விடாததால் அவதி அடைகின்றனர். மேலும் குதிரைகள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டு கொண்டு அங்கும், இங்கும் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிலர் சிறு காயங்களுடன் தப்பி செல்கின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

சுற்றுலா நகரமான ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றுவது வாடிக்கையாகி விட்டது. சாலையில் சுற்றித்திரிய விடாமல் இருக்க நகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், தொடர் நடவடிக்கை இல்லாததால் குதிரைகள் சுற்றுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்