பல்லடம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி வடமாநில தொழிலாளி படுகொலை போலீஸ் விசாரணை

பல்லடம் அருகே வடமாநில தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-06-12 03:15 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கல்லம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த மில்லுக்கு அசாம் மாநிலம் தேமாஜி பகுதியை சேர்ந்த போலின்புகான் என்பவரது மகன் நபாபுகான் (வயது 29) என்பவர் பணிக்கு சேர்ந்தார். இவர் அந்த மில்லுக்கு அருகிலேயே மில்லுக்கு சொந்தமான குடியிருப்பில் தங்கி பணிக்குச்சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடித்து திரும்பி வந்த நபாபுகான் இரவு அவரது அறைக்கு சென்று தூங்கச்சென்றுள்ளார். அதிகாலை நண்பர்கள் இவரது அறைக்குச்சென்று பார்த்தபோது அங்கு நபாபுகான் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, மூளை சிதறி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். யாரோ மர்ம ஆசாமி அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார். இது குறித்து அங்கிருந்தவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நபாபுகானின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் டெவில் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் டெவில் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் நபாபுகானின் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பாக மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமும், அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை வழக்கு தொடர்பாக அவருடன் அறையில் தங்கி இருந்த நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்லடம் பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு வடமாநில வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்