கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை - மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பேட்டி

கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2020-06-15 00:24 GMT
கலபுரகி, 

நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரிகளுடன் நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்களும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் நாட்டில் மீண்டும் ஒரு முறை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. பிரதமர் காணொலி காட்சியில் ஆலோசனை நடத்த உள்ளதால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற செய்திகள் பரவி வருகின்றன. வருகிற 17-ந் தேதி மதியம் 3 மணிக்கு பிரதமரின் காணொலி காட்சி கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொள்கிறார்.

கொரோனாவை தடுக்க...

கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் தொடர்ந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, நிலைமையை ஆராய்ந்து வருகிறார். அடுத்து வரும் நாட்களில் கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்து வருகிறார். என்னை பொறுத்தவரையில் மீண்டும் ஊரடங்கு இருக்காது.

அதனால் பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், குணம் அடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. கொரோனா விஷயத்தில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது.

வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் கொரோனா சமுதாய பரவலை எட்டவில்லை. அது கட்டுக்குள் உள்ளது.

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

அடுத்து வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அதனால் இவற்றை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவதை தடுக்க முடியும். நம்மிடையே எச்சரிக்கையாக இருக்கும் உணர்வு வந்துவிட்டால், கொரோனாவை தடுப்பது என்பது கடினமான பணி அல்ல.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்