கடலில் மூழ்கியவரை ஹெலிகாப்டர் மூலம் தேட வலியுறுத்தி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

கடலில் மூழ்கியவரை ஹெலிகாப்டர் மூலம் தேட வலியுறுத்தி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-16 21:30 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கிளாரட் நகர் சுனாமி காலனியை சேர்ந்த அல்போன்ஸ் மகன் லிப்டன் (வயது 27), மீனவர். இவர் உள்பட 19 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, லிப்டன் எதிர்பாராதவிதமாக கடலுக்குள் விழுந்து மூழ்கினார். அவரை சக மீனவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் சோகத்துடன் கரை திரும்பினர்.

நேற்றுமுன்தினம் அனைத்து விசைப்படகு சங்கங்கள் சார்பில் 15 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் கடலில் மூழ்கிய லிப்டனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் இணைந்து தேடினர். ஆனால் லிப்டனை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இதனால் மீனவரின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் நேற்று சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கிய லிப்டனை கண்டுபிடிக்க ஹெலிகாப்டரில் சென்று தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் மீன்பிடிக்கசெல்ல வில்லை.

இதனால் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்திலேயே ஓய்வெடுத்தன. அங்கு நங்கூரம் பாய்ச்சி விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், தினமும் பரபரப்பாக காணப்படும் துறைமுகம் களை இழந்து காணப்பட்டது. அதேபோல் மீன்பிடி ஏலக்கூடத்தில் மீன்கள் இன்றி வெறிச்சோடியது. விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்