புதிதாக 317 பேருக்கு தொற்று: கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலியாகினர். புதிதாக 317 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4,456 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Update: 2020-06-17 00:03 GMT
பெங்களூரு, 

இதுதொடர்பாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7,122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 317 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,439 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,456 பேர் குணம் அடைந்துள்ளனர். இதில் நேற்று மட்டும் 322 பேர் அடங்குவர்.

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் பெங்களூருவை சேர்ந்த 72 வயது, 60 வயது முதியவர்கள், 65 வயது, 85 வயது, 86 வயது மூதாட்டிகள், ராமநகரை சேர்ந்த 48 வயது நபர், பீதரை சேர்ந்த 49 வயது நபர் உயிரிழந்தனர்.

மருத்துவ கண்காணிப்பு

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் தட்சிண கன்னடாவில் 79 பேர், கலபுரகியில் 63 பேர், பல்லாரியில் 53 பேர், பெங்களூரு நகரில் 47 பேர், தார்வாரில் 8 பேர், உடுப்பியில் 7 பேர், சிவமொக்காவில் 7 பேர், யாதகிரி, ராய்ச்சூர், உத்தரகன்னடாவில் தலா 6 பேர், ஹாசனில் 5 பேர், விஜயாப்புரா, மைசூரு, கதக், ராமநகர், சிக்கமகளூரு, கொப்பலில் தலா 4 பேர், பெலகாவியில் 3 பேர், பீதரில் 2 பேர், துமகூருவில் ஒருவர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 4 லட்சத்து 57 ஆயிரத்து 267 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 7,936 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 36 ஆயிரத்து 373 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரேநாளில் 7 பேர் மரணம்

கர்நாடகத்தில் கொரோனா நோய்க்கு நேற்று ஒரேநாளில் 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 5 பேர் அடங்குவர். கடந்த வாரத்தில் ஒருநாள் இதேபோல் ஒரேநாளில் 7 பேர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் என்பது ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தாலும், மரணம் அடைகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த வாரம் பரிசோதனையின் எண்ணிக்கை 15 ஆயிரம் வரை சென்றது. ஆனால் திடீரென்று பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பரிசோதனை நேற்று முன்தினம் சுமார் 5 ஆயிரமும், நேற்று சுமார் 8 ஆயிரமும் நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்