கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை கர்நாடகத்திற்கு இனி ஊரடங்கு தேவை இல்லை - முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

கர்நாடகத்திற்கு இனி ஊரடங்கு தேவை இல்லை என்றும், கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Update: 2020-06-17 00:25 GMT
பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் உள்ள சங்கர மடத்திற்கு வந்து, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா பிரச்சினையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். கர்நாடக அரசின் நிதி நிலை மோசமாக இருந்த நிலையிலும் ரூ.1,000 கோடி விடுவித்துள்ளேன். பிரதமர் சம்மான் திட்டத்தின் கீழ் 50 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 விடுவித்துள்ளேன்.

பரிசோதனையை அதிகரிக்க...

விவசாயிகள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவித்தொகையை வழங்கியுள்ளேன். கொரோனா வைரசை தடுக்க மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கடுமையான முறையில் எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

நாளை (அதாவது இன்று) பிரதமருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளேன். இதில் ஊரடங்கை மேலும் தளர்த்துமாறு கேட்க உள்ளேன். கர்நாடகத்திற்கு இனி ஊரடங்கு தேவை இல்லை. பொதுமக்கள் எந்த தொந்தரவும் இன்றி தங்களின் இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கொரோனா பரவல்

கர்நாடகத்தை பொறுத்தவரையில் கொரோனா பரவல் என்பது கட்டுக்குள் உள்ளது. இதை மேலும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்