இந்தியா-ஓமன் இடையேயான நட்பு புதிய உயரங்களை தொடும்- பிரதமர் மோடி பேச்சு
ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.;
மஸ்கட்,
பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கான பயணத்தை கடந்த 15-ந்தேதி தொடங்கினார். முதலில் ஜோர்டானுக்கு சென்று இருதரப்பு பேச்சுவார்த்தை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் எத்தியோப்பியாவுக்கு சென்றார். எத்தியோப்பிய பயணத்தை முடித்து, பிரதமர் மோடி இறுதிக்கட்டமாக நேற்று மாலை ஓமனுக்கு சென்றடைந்தார்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை ஓமனின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சயீத் நேரில் வரவேற்றார்.அதேபோல், மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று இந்தியா–ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த உச்சி மாநாடு இந்தியா–ஓமன் கூட்டாண்மைக்கு ஒரு புதிய திசையையும், புதிய வேகத்தையும் அளித்து, அதை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல உதவும். இதில் உங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பங்கு உள்ளது.நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே நமது முன்னோர்கள் ஒருவருக்கொருவர் கடல்வழி வர்த்தகம் செய்து வருகின்றனர். மும்பைக்கும் மஸ்கட்டுக்கும் இடையிலான அரபிக்கடல் ஒரு வலிமையான பாலமாக மாறியுள்ளது. அந்தப் பாலம் நமது உறவுகளை வலுப்படுத்தி, நமது கலாச்சார–பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளித்துள்ளது.கடலின் அலைகள் மாறலாம், பருவங்கள் மாறலாம்; ஆனால் இந்தியா–ஓமன் நட்பு ஒவ்வொரு பருவத்திலும் வலுப்பெற்று, ஒவ்வொரு அலையுடனும் புதிய உயரங்களைத் தொடும். நமது உறவு நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. நட்பின் பலத்தால் முன்னோக்கிச் சென்றுள்ளது. அது காலப்போக்கில் மேலும் வலுவடைந்துள்ளது.
இன்று நமது தூதரக உறவுகள் 70 ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இது வெறும் 70 ஆண்டுகளுக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல. இது நமது பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தை வளமான எதிர்காலத்தை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு மைல்கல் ஆகும்.இவ்வாறு மோடி பேசினார்.இந்திய வம்சாவளியினர் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடினார். பிரதமர் மோடி, ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.