”களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான ஐடியாவே இல்லை” - விஜய் அதிரடி பேச்சு

எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுத்தான் களத்திற்கு வந்திருக்கிறோம் என விஜய் பேசினார்.;

Update:2025-12-18 15:59 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், தவெக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஜய், களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான ஐடியாவே இல்லை என்றும், எங்கள் எதிரியை சொல்லிவிட்டுத்தான் களத்திற்கு வந்துள்ளோம் எனவும் பேசினார். விஜய் பேசியது பேசியதாவது;

"பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளையடிக்கும் இவர்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள். உங்களுக்குப் புரிந்தால் போதும், எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை. அதனால்தான் எதிரிகள் யார் எனக் கூறிவிட்டுக் களத்திற்கு வந்திருக்கிறோம். அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் அந்த எதிரிகள், இப்போது இங்கே 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.

பெருமையாக 'மாடல் அரசு' என்கிறார்கள். இவற்றை கேட்டால் விஜய் அரசியலே பேச மறுக்கிறார், விஜய் சினிமா வசனம் மாதிரி பேசுகிறார், விஜய் பஞ்ச் வசனம் பேசுகிறார், விஜய் பத்து நிமிடம் தான் பேசுகிறார், ஒன்பது நிமிடம் தான் பேசுகிறார் என நம்மிடமே திரும்பி வருகிறார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? நான் எப்படிப் பேசினால் உங்களுக்கு என்ன? பேசுவதில் இருக்கும் விஷயம் என்னவென்று பாருங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். பின்னர் அது அரசியல் இல்லாமல் வேறு எதுதான் அரசியல்? உங்களைப் போலத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக, இழிவாகப் பேசுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியல் நமக்கு வராது. உங்களை விட எனக்கு அது நன்றாகவே வரும். வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

சமீபத்தில் ஒரு இடத்தில் நம் முதலமைச்சர் அவர்கள், 'என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்கிறீர்கள்' என பேசினார். நான் ஏதாவது பேசினால் சினிமா வசனம், அவர் பேசினால் அது சினிமா வசனம் இல்லை. அந்த வரி சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? உங்களை எப்படித்தான் புரிந்து கொள்வது? எந்தெந்த விஷயத்தில் எல்லாம் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் புரிந்து கொள்வது? அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.”

இவ்வாறு விஜய் ஆவேசமாக பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்