இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.;
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன், இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில், தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் சிப்காட் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம்- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரகசிய கண்காணிப்பு அலுவலில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களில் வந்த தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்த கென்னடி மகன் சுதர்சன் (வயது 33) மற்றும் தூத்துக்குடி தேவர்காலனி பகுதியை சேர்ந்த முட்டை சுரேஷ் உட்பட 4 நபர்கள், சுமார் 100 கிலோ அளவுடைய 50 கஞ்சா போதைப் பொருள் பொட்டலங்கள் அடங்கிய நான்கு மூட்டைகளை கொண்டு வந்து, அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக மற்றொரு கும்பலுக்கு கைமாற்றி விடுவதற்காக கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி செல்ல முயன்றதில், மேற்சொன்ன சுதர்சன் என்பவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது பைக் மற்றும் 100 கிலோ கஞ்சா பிடிபட்டது. மற்ற நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் தூத்துக்குடி தேவர்காலனி பகுதியைச் சேர்ந்த முட்டை சுரேஷ் என்பவர், மேற்சொன்ன கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு கடத்துவதற்காக மற்றொரு கும்பலுக்கு விற்க இருந்தது தெரியவந்தது.
மேலும் பிடிபட்ட சுதர்சன் மீது ஒரு கொலை வழக்கு, ஒரு கஞ்சா போதை பொருள் வைத்திருந்த வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 7 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சுதர்சன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், ஒரு பைக் ஆகியவற்றை கியூ பிரிவு அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி ஆகும். மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.