இதுவரை இல்லாத புதிய உச்சம்: கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலி - சாவு எண்ணிக்க்கை 118 ஆக உயர்வு

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-06-19 00:19 GMT
பெங்களூரு, 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதேபோல் இந்தியாவும் உலக அளவில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 3½ லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மராட்டிய மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிக அளவில் இருக்கிறது. மேற்கண்ட இரு மாநிலங்களுக்கும் அண்டை மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது.

கர்நாடகத்தில் முதலில் கொரோனா பரவல் அதிக அளவில் இல்லை. ஆனால் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் கொரோனாவுக்கு 106 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் நேற்று ஒரேநாளில் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. நேற்று பலியானவர்களில் பெங்களூருவில் மட்டும் 8 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறித்து நேற்று மாநில அரசின் சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

210 பேருக்கு தொற்று

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 7,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 210 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 7,838 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 12 பேர் பலியாகியுள்ளனர். அதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 7,826 ஆக உள்ளது.

அதாவது பெங்களூருவை சேர்ந்த 57 வயது, 58 வயது, 39 வயது நபர்கள், 40 வயது பெண், 68 வயது முதியவர், 74 வயது, 65 வயது மூதாட்டிகள், 31 வயது இளைஞர், கொப்பலை சேர்ந்த 50 வயது பெண், பீதரை சேர்ந்த 55 வயது நபர், விஜயாயப்புராவை சேர்ந்த 66 வயது மூதாட்டி, கலபுரகியை சேர்ந்த 50 வயது நபர் என மொத்தம் 12 பேர் மரணம் அடைந்துள்ளனனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவ கண்காணிப்பு

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பல்லாரியில் 48 பேர், கலபுரகியில் 48 பேர், தட்சிண கன்னடாவில் 23 பேர், ராமநகரில் 21 பேர், பெங்களூரு நகரில் 17 பேர், யாதகிரியில் 8 பேர், மண்டியாவில் 7 பேர், பீதரில் 6 பேர், கதக்கில் 5 பேர், ராய்ச்சூர், ஹாசன், தார்வாரில் தலா 4 பேர், தாவணகெரே, சிக்கமகளூருவில் தலா 3 பேர், விஜயாப்புரா உத்தரகன்னடா, மைசூருவில் தலா 2 பேர், பாகல்கோட்டை, சிவமொக்கா, கொப்பலில் தலா ஒருவர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 4 லட்சத்து 73 ஆயிரத்து 507 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 8,709 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 657 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் மரணம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு நகரில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், மரணம் அடைகிறவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நகரில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு இல்லாத மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது.

இது பெங்களூருவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. மாநிலத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கர்நாடக அரசையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் 50-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று திடீரென்று தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது.

கட்டுக்குள்உள்ளது

பெங்களூருவில் பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்றைய பாதிப்பை பொறுத்தவரையில் பெங்களூரு நகரவாசிகள், சற்று நிம்மதி அடையலாம். கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பில் பெங்களூருதான் முதல் இடத்தில் உள்ளது. அதாவது இதுவரை அந்த தொற்றுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது, பெங்களூருவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த நகரங்களில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில் பெங்களூருவில் வைரஸ் தொற்று இன்னும் ஆயிரத்தையே எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்