கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் - அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-06-19 22:15 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்தியாவிலேயே, அதிக நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் சிறப்பு மருத்துவமனையாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன்படி, இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மூலம் 2 ஆயிரத்து 94 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளும் 387 செயற்கை சுவாசக்கருவிகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா வைரஸ் தடுப்புக்காக பிரத்யேகமாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், 149 டாக்டர்கள், 112 நர்சுகள் மற்றும் 621 இதர பணியாளர்கள் என மொத்தம் 882 பேர் மூன்று குழுக்களாக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து கோவைக்கு திரும்பியவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 48 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு கோவை மாவட்டத்திற்குள் அனுமதி பெற்று வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தருகிறவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிருந்து விமானங்கள் மூலம் வருகை தருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்திற்கு ஊரடங்கு காலத்திற்கு பின் வெளிமாநிலங்களிலிருந்து 89 விமானங்கள் வந்துள்ளது. அவற்றில் 10 ஆயிரத்து 929 பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் 63 பேர் கொரோனா தொற்று பாதித்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அதுபோலவே, ரெயில்கள் மூலம் வெளிமாவட்டங்களிலிருந்து ஒரு நாளுக்கு சராசரியாக கோவை மாவட்டத்திற்கு ஆயிரத்து 765 பேர் வருகிறார்கள். சாலை மார்க்கமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு சோதனைச்சாவடிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரத்து 380 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த 17 ஆயிரத்து 938 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொது இடங்களுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாறாக முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபாரதம் விதிக்கப்படும். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவிக்கும் தொடர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித்சரண், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்