மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாராயணசாமி ஆலோசனை - போராட்டத்தை கைவிட வலியுறுத்தல்

மின்துறை நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

Update: 2020-06-20 07:31 GMT
புதுச்சேரி, 

யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. புதுவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் மின்துறை ஊழியர்கள் விதிகளின் கீழ் பணியாற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதாவது மாலை 5½ மணிக்கு மேல் ஏற்படும் மின் பழுதுகளை அவர்கள் சரி செய்வது இல்லை. இதனால் மின் வினியோகம் பாதித்து பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். இந்தநிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதில் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி, தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, ‘மின்துறை தனியார் மயமாக்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம். இதனை எதிர்த்து சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும். போராட்டத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்’ என்றார்.

அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இன்று (சனிக்கிழமை) தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்