செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 160 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

Update: 2020-06-30 20:48 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், கம்பர் தெருவை சேர்ந்த 32 வயது வாலிபர், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய மண்ணிவாக்கம் அறிஞர் அண்ணா காலனியில் வசிக்கும் 22 வயது இளைஞர் உள்பட 6 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,419 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,661 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மேலும், நேற்று 95 வயது மூதாட்டி, 68 வயது, 62 வயது, மற்றும் 61 வயது முதியவர்கள், 48 வயது ஆண் ஆகிய 5 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள கீழ்படப்பை பெரிய தெருவைச் சேர்ந்த 45 வயது பெண் மற்றும் பெரிய தெருவைச் சேர்ந்த 23 வயது பெண், படப்பை புஷ்பகிரி சாலையை சேர்ந்த 23 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து இவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,977 ஆக உயர்ந்தது. இவர்களில் 808 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,148 தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பொதட்டூர்பேட்டையை சேர்ந்த 25 வயது போலீஸ்காரருக்கும், ஆர்.கே.பேட்டையை சேர்ந்த 27 வயதுடைய போலீஸ்காரருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆனது. இதனையடுத்து நேற்று பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 153 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,830 ஆக உயர்ந்தது.

இவர்களில் 2,373 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,388 தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 69 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்