மாவட்டத்தில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-03 06:25 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை நகரில் அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்த 38 வயது ஆண், பூங்கா நகரை சேர்ந்த 58 வயது ஆண், கோல்டன்நகரை சேர்ந்த 25 வயது பெண், வடக்கு 4-ம் வீதியை சேர்ந்த 17 வயது சிறுவன், கீழ ராஜ வீதியில் உள்ள வங்கி ஊழியர்கள் 46 வயது ஆண் மற்றும் 36 வயது பெண், டி.வி. நகரை சேர்ந்த 48 வயது பெண் மற்றும் விராலிமலை பகுதியை சேர்ந்த 8 பேருக்கும், இலுப்பூர் பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், திருமயம் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், அறந்தாங்கி, அம்புகோவில், கறம்பக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் விராலிமலையை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அம்புகோவிலை சேர்ந்த 22 வயது பெண் கோவையிலும், விராலிமலையை சேர்ந்த 21 வயது பெண் திருச்சியிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

234 ஆக உயர்வு

கீரனூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் பெற்றோருடன் வசித்து வரும் 25 வயது வாலிபர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடைய தாய், தந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 73 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்