சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் முத்துராஜ் அதிரடி கைது

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் முத்துராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2020-07-03 23:30 GMT
தூத்துக்குடி, 

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் முத்துராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும், சிறையில் உள்ள 4 போலீஸ்காரர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

தந்தை, மகன் சாவு

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனு

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது, எதற்காக தந்தை, மகனை இரவு முழுவதும் தாக்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேடுதல் வேட்டை

இதற்கிடையே, இந்த வழக்கில் போலீஸ்காரர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடிவந்தனர். அவருடைய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் இருப்பிடத்தை அறிய முயன்றனர்.

அதன்படி வேப்பலோடை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் கடைசியாக சிக்னல் கிடைத்து உள்ளது. அதன்பிறகு அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த ஊருக்கு சென்றனர். ஆனால், அங்கு இருந்து அவர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார், முத்துராஜூடன் கடைசியாக பேசியவர்கள் விவரங்களை சேகரித்து, அவர்கள் மூலம் முத்துராஜின் இருப்பிடத்தை அறிவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. அவரை தேடும் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அதிரடி கைது

இந்த நிலையில் முத்துராஜின் மோட்டார் சைக்கிள் பசுவந்தனை அருகே உள்ள கீழமங்கலம் காட்டுப்பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் பகுதியில் முத்துராஜ் சுற்றித்திரிவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று முத்துராஜை மடக்கி பிடித்து கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்