விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Update: 2024-04-28 14:49 GMT

புதுக்கோட்டை:

மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளையும் என்று அனைவராலும் அறியப்பட்ட மசாலா பயிர் வகையான மிளகு, சமவெளியிலும் சிறப்பாக விளையும் என்பதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.

புதுக்கோட்டையில் ஆலங்குடி தாலுகா, அனவயலில் அமைந்துள்ள முன்னோடி மிளகு விவசாயி ராஜாகண்ணுவின் பண்ணையிலும், மயிலாடுதுறையில் அரையபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் வீரமணியின் தோட்டத்திலும் நடைபெற்றது.

கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் "தற்சமயம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சம வெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிருபிக்கபட்டுள்ளதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இக்கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், 2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5 - 6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார்.

அத்துடன், பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

 

இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்