வில்லுக்குறி அருகே காதலனுடன் ஓடிய இளம்பெண்ணுக்கு கொரோனா குளச்சல் மகளிர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது

வில்லுக்குறி அருகே காதலனுடன் ஓடிய இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. விசாரணைக்கு சென்ற போலீஸ் நிலையமும் மூடப்பட்டது.

Update: 2020-07-04 22:33 GMT
குளச்சல்,

வில்லுக்குறி அருகே காதலனுடன் ஓடிய இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. விசாரணைக்கு சென்ற போலீஸ் நிலையமும் மூடப்பட்டது.

இளம்பெண்ணுக்கு கொரோனா

வில்லுக்குறி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமானார். இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடனே போலீசார் விசாரணை நடத்தியதில், குமாரபுரத்தை சேர்ந்த காதலனுடன் அந்த இளம்பெண் ஓடியது தெரிய வந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் காதலன் இளம்பெண்ணிடம் இருந்து பிரிந்து தலைமறைவாகி விட்டார்.

பின்னர் மகளிர் போலீசார் இளம்பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், இளம்பெண்ணிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர் உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் நிலையம் மூடல்

இதனை அறிந்த குளச்சல் மகளிர் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதாவது, சளி மாதிரி சேகரித்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தும், பிளச்சிங் பவுடர் தூவியும் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ளப்பட் டதுடன் போலீஸ் நிலையம் மூடப்பட்டது. மேலும், பெண்ணுடன் தங்கிய காதலன் பற்றிய விவரத்தையும் சுகாதாரத்துறையினர் சேகரித்துள்ளனர். அவர் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அரசியல் பிரமுகர் ஒருவரும் இளம்பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. அவர் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்