வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் புகார் எதிரொலி: தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் புகார்களின் அடிப்படையில் தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-07-05 06:02 GMT
திருச்சி, 

மத்திய-மாநில அரசுகளின் உத்தரவுப்படி வெளிநாடுகளில் தங்கி இருக்கும் இந்தியவாழ் மக்களை கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் அழைத்து வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்துக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்து 400 முதல் 500 பயணிகள் வரை வருகிறார்கள். இந்த பயணிகளில் பலர் தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகளிடம் விமான கட்டணம், தனிமைப்படுத்துவதற்கான தங்குமிடம் மற்றும் உணவு செலவு, 2 முறை கொரோனா பரிசோதனை ஆகியவற்றுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்துகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வந்தவுடன் விமானநிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மூலம் ஓட்டல்களுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

கொரோனா பரிசோதனை

விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான முதல் மருத்துவ அறிக்கை 2 நாட்களில் பெறப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்களை அரசு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதர பயணிகளுக்கு 2-வது மருத்துவபரிசோதனை முதல் பரிசோதனை எடுக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். ஆனால் 2-வது பரிசோதனை மேற்கொள்ளாமல் பயணிகளை திசை திருப்பி 6-வது நாளிலேயே அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக கூறுவதாகவும், பயணிகளிடம் ஏற்கனவே தனி அறைக்கு பணம் பெற்று கொண்டு ஒரு அறையில் 2 அல்லது 3 பேரை தங்க வைப்பதாகவும் தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது புகார்கள் வரப்பெற்றுள்ளது. அவ்வாறு வரப்பெற்ற புகார்கள் மீது சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் ஏஜெண்டுகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்