கொரோனா பரிசோதனை அதிகரிப்பால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்வு; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கோவை மாவட்டத்தில் பரிசோதனை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2020-07-13 05:12 GMT
கோவை,

கோவையில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்று மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால் சென்னையில் இருந்து வந்தவர்களால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த 9-ந் தேதி ஆயிரத்தை தாண்டியது.

கடந்த மே மாதம் தினமும் 300 முதல் 400 பேருக்கு தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவைக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தொற்று உறுதியானால் அவர்களோடு நேரடியாக தொடர்பில் உள்ளவர்கள், மறைமுக தொடர்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. எனவேதான் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கோவையில் கொரோனா அறிகுறியுடன் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் 5 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் உள்ளனர்.

மற்ற 95 சதவீதத்தில் அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் 70 சதவீதம் பேர், மீதி 25 சதவீதம் பேர் அறிகுறியுடன் அனுமதிக்கப் படுபவர்கள் ஆவார்கள். கோவையில் இதுவரை யாருக்கும் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஆனால் இறந்தவர்கள் அனைவரும் வேறு ஏதாவது நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

அதனால் தான் வயதானவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கோவை மாவட்டத்தில் எந்தவித நோய் பிரச்சினையும் இல்லாதவர்கள் கொரோனாவால் இறப்பது மிக மிக குறைவு.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்