செந்துறை பகுதியில் கனமழை: தாலுகா அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்தது ஏரி- குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

செந்துறை பகுதியில் கனமழை பெய்ததால் செந்துறை தாலுகா அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் ஏரி- குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-07-13 06:40 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை, உஞ்சினி நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், நக்கம்பாடி, மருவத்தூர் உள்ளிட்ட பெரும்பான்மையான பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்பின்னர் இரவு 7 மணி அளவில் தொடங்கிய கனமழை 9 மணி வரை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து பெய்தது. இதனால் காட்டாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் கனமழையால் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. அதேபோன்று செந்துறை தாலுகா அலுவலகத்தில் நீர்வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அங்கிருந்து மழைநீர் செல்ல முடியாமல் செந்துறை தாலுகா அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன், துணை தலைவர் ரமேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வடிய செய்தனர். மேலும் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் ஏற்கனவே செந்துறை பெரிய ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட ஒரு பகுதியில் ஆறுபோல் ஓடிவந்து ஏரியில் நிரம்பியது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

இதேபோல் தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மேற்கொண்ட அனைத்து ஏரிகளிலும் நீர் நிரம்பும் நிலையில் உள்ளது. 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட செந்துறை பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயி செல்லமுத்து அரியலூர் கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார். இதுகுறித்து செய்தி தினத்தந்தியில் பிரசுரமானது. அதனை தொடர்ந்து அரியலூர் கலெக்டர் ரத்னா உத்தரவின் பேரில் கடந்த வாரம் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செந்துறை பெரிய ஏரிக்கு வரும் நீர் வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் பட்டியல் தயார் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வழங்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்