பல்லடத்தில் கொரோனா பாதித்த 3 பேர் குணமடைந்தனர்; சப்-இன்ஸ்பெக்டருக்கு தொடர்ந்து சிகிச்சை

பல்லடம் நகராட்சி பகுதியில் கொரோனா பாதித்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சப்-இன்ஸ்பெக்டர் மட்டும் சிகிச்சை பெறுகிறார்.

Update: 2020-07-13 22:45 GMT
பல்லடம்,

பல்லடம் நகராட்சியில் அண்ணா நகர் பகுதியில் 2 பேரும், கல்லம்பாளையம் பகுதியில் ஒருவரும், முல்லைநகர் பகுதியில் வசிக்கும் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் என மொத்தம் 4 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டனர். வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டருக்கு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்,இதனால் பல்லடம் நகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது,

இது குறித்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கூறியதாவது:-

பல்லடம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்ற வந்த 4 நபர்களில் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர் வசிக்கும் குடியிருப்பு எல்லைகளில் சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இது தவிர பல்லடம் நகராட்சி பகுதியியில் 11 வீடுகளில் 36 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அந்த பகுதிகளில் பல்லடம் நகராட்சி நிர்வாகம்,சுகாதாரதுறையினர், போலீசார் இணைந்து குடியிருப்பு எல்லைகளில் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்