பல்லடத்தில் ஊழியருக்கு கொரோனா; கோர்ட்டு மூடப்பட்டது

பல்லடத்தில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கோர்ட்டு மூடப்பட்டது.

Update: 2020-07-15 23:56 GMT
பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கும் பரமக்குடியை சேர்ந்த 28 வயதானவர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றுவந்தார்.

அதை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய ரத்தம், சளி மாதிரி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை உறுதியானது. இதையடுத்து சுகாதாரதுறையினர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் கோர்ட்டில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

கோர்ட்டு மூடல்

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகாதாரதுறையினர் உடனடியாக பல்லடம் நீதிமன்றத்திற்கு வந்து அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்குக்கொண்டு சென்றனர். மேலும் நகராட்சி நிர்வாகத்தினர் கோர்ட்டு வளாகத்தை மூடி, கிருமி நாசினி தெளித்தனர். மேலும் கோர்ட்டு வளாகத்தை தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது

கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் பணிபுரிந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்