ஈரோட்டில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதி

ஈரோட்டில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது.

Update: 2020-07-16 04:07 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 451 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட குமரன்நகரில் 2 பேரும், பாவந்தி வீதியில் 55 வயது பெண்ணும், நேதாஜி 2-வது வீதியில் 48 வயது பெண்ணும், சூரம்பட்டியில் 51 வயது ஆணும், பழனியம்மாள் வீதியில் 43 வயது ஆணும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பவானி வீரணாபுரத்தில் 2 பேருக்கும், காவிரி வீதியில் 64 வயது முதியவருக்கும் கொரோனா உறுதியானது.

கொரோனாவுக்கு ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். ஈரோடு கொத்துக்காரர்தோட்டம் பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் காய்ச்சல், மூச்சு திணறல் தொந்தரவு காரணமாக கடந்த 10-ந் தேதி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர். தினமும் வேலைக்கு வந்து சென்றுள்ளார். அவர் தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியாற்றி வந்த பிரிவு அலுவலகம் மட்டும் மூடப்பட்டு உள்ளது. மேலும், ஈரோடு மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் சுமார் 120 ஊழியர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஈரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக்கடையிலும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பணியாற்றி வந்த துணிகள் பிரிவு மட்டும் மூடப்பட்டது. மேலும், அந்த ஜவுளிக்கடையில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்