திருச்சியில் பரபரப்பு: பாலிடெக்னிக் மாணவர் தீக்குளிப்பு காதல் தோல்வியால் விபரீதம்

திருச்சியில், காதல் தோல்வியால் பாலிடெக்னிக் மாணவர் தீக்குளித்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-07-16 07:22 GMT
மலைக்கோட்டை,

திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்த சின்னமுத்துவின் மகன் வேல்முருகன் (வயது 18). இவர், திருச்சி அருகே சிறுகனூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ படித்து வந்தார். இவருடன் திருப்பராய்த்துறையை சேர்ந்த மாணவி ஒருவரும் அதே கல்லூரியில் படித்தார்.

அந்த மாணவி இவருடன் நட்பாக பழகினார். ஆனால் வேல்முருகன் அதை காதலாக எடுத்துக்கொண்டு, மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேல்முருகனை கண்டித்துள்ளனர். இதனால் அப்போது அவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதுடன், கல்லூரிக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார்.

இந்தநிலையில் நேற்று மாணவி தரப்பில் இருவர், மாணவர் வேல்முருகனை தொடர்பு கொண்டு, திருச்சி சத்திரம் அருகில் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள திறந்தவெளிக்கு வரச்செய்தனர். வேல்முருகனோடு அவரது நண்பர் விஜய்யும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு வந்தார்.

அப்போது மாணவி தரப்பினர், ‘மாணவி உன்னுடன் காதலிக்கும் எண்ணத்தில் பழகவில்லை. கல்லூரியில் ஒன்றாக படிப்பதால் நட்பாக பழகி இருக்கிறார். எனவே, இனி காதல் எண்ணத்தை கைவிட்டு விடு’ என்று கூறி இருக்கிறார்கள். இது வேல்முருகனுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மனமுடைந்த வேல்முருகன், அங்கிருந்த கழிவறைக்கு சென்று, தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் எரியும் தீயுடன் வெளியே வந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய், சமயோசிதமாக செயல்பட்டு, அவரை சாலையோரம் இருந்த சாக்கடையில் தள்ளிவிட்டார். பின்னர், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் மாணவர் 2-வது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்