கோவை மாநகர பகுதியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணிக்கு நவீன ரோபோக்கள்

கோவை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணிக்கு 5 ரோபோக்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

Update: 2020-07-17 03:46 GMT
கோவை,

கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணிக்கு மனிதனை பயன்படுத்தும் முறையை அறவே ஒழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலின்படி கடந்த 2019-ம் ஆண்டு ரோபோடிக் 2.0 என்ற நவீன கருவியை வாங்கி அதன் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கும் இந்த நவீன ரோபோவை வாங்க முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி சார்பில் 10 சதவீதம் நிதியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பிலும் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் 5 நவீன ரோபோக்கள் வாங்கப்பட்டன.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

இதை பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய நவீன ரோபோக்களை பயன்பாட்டுக்காக கொடியசைத்தும், பொத்தானை அழுத்தியும் தொடங்கி வைத்தார்.

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக தனியார் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் கோவை கேர் என்ற செயலியை கண்டுபிடித்தனர். இந்த செயலியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு கூடுதல் முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை ஆணையாளர் மதுராந்தகி, மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்