சொத்துக்களை பிரித்து கொடுக்கும்படி கேட்ட மகனை அடித்துக்கொன்ற விவசாயி கைது

உடுமலை அருகே சொத்துக்களை பிரித்து கொடுக்கும்படி கேட்ட மகனை கட்டையால் அடித்துக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-17 22:57 GMT
தளி,

உடுமலை அருகே உள்ள வல்லகுண்டாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). விவசாயி. இவருடைய மகன் செந்தில்நாதன் (29). இவருடைய மனைவி மலர்செல்வி(24). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் பழனிசாமியின் பெயரில் உள்ள நிலத்தை பிரித்து தனது பெயருக்கு மாற்றித்தரும்படி செந்தில்நாதன் தொடர்ந்து தந்தையை வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் நிலத்தை எழுதிக்கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்தது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து செந்தில்நாதனை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்நாதன் உயிரிழந்தார்.

இது குறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்நாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். சொத்து பிரச்சினை காரணமாக மகனை, தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்