திருவள்ளூரில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவள்ளூரில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம், செல்போன் மற்றும் அரிசி மூடைகளை திருடிச்சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-07-18 02:20 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 42). இவர் அப்பகுதியில் கைக்கெடிகார கடை நடத்தி வருகிறார். இருதயராஜ் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த 5 செல்போன்கள், பணப்பெட்டியில் இருந்த ரூ.13 ஆயிரத்து 500 திருட்டு போனது தெரியவந்தது.

அவரது பக்கத்து கடையான சண்முகம் (31) என்பவரின் மளிகைக் கடையின் பூட்டை உடைத்தும் அங்கு இருந்த ரூ.25 ஆயிரத்தையும், அரிசி மூடைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் அதே பகுதியில் தேவி (42) என்பவருக்கு சொந்தமான அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கு இருந்த 10 புடவைகளையும், ரூ.30 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 3 கடை உரிமையாளர்களும் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுதொடர்பாக திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்