ஆம்பூரில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்பட 50 காங்கிரசார் மீது வழக்குப்பதிவு

ஆம்பூரில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்பட 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2020-07-18 22:45 GMT
ஆம்பூர், 

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வழியில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்களின் செயலை மத நம்பிக்கை உடையவர்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். முருக பக்தனாகிய நானே ஏற்க மாட்டேன். கொச்சைப்படுத்திய அச்செயல் மிகவும் தவறானதாகும். அச்செயலுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தால் அ.தி.மு.க.வின் கட்டுப்பாட்டை, அவர் கையில் எடுத்துக் கொள்வார். டி.டி.வி.தினகரன் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வந்து விடுவார். அவர்களுடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் அ.தி.மு.க. இருக்கும். பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசியது அவரின் கொள்கைகளுக்கு எதிரானவர்களால் செய்யப்பட்ட கீழ்த்தரமான செயலாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஊரடங்கு அமலில் இருக்கும்போது, தடையை மீறி கும்பலாக காங்கிரசார் கூடியதால் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்பட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி.க்கு ஆம்பூர் பைபாஸ் சாலை ராஜீவ் காந்தி சிலை அருகே வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.பிரபு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்