கொரோனா சிகிச்சை மையங்கள் வேகமாக நிரம்புகிறது: நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் 250 படுக்கைகள் அமைப்பு

கொரோனா சிகிச்சை மையங்கள் வேகமாக நிரம்புவதால் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 வகுப்பறைகளில் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2020-07-19 05:16 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சராசரியாக நாள்தோறும் 100 முதல் 150 பேர் வரையிலும் புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். சில நாட்களில் 150-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் ஆசாரிபள்ளத்தில் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த சிகிச்சை மையங்கள் நிரம்பி விட்டன. அங்கு 700 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே ஆஸ்பத்திரி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 142 பேரும், கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 300 பேரும், தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் 50 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

250 படுக்கைகள்

இவைதவிர கோணம் அரசு கலைக்கல்லூரியில் 200 படுக்கைகளும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 265 படுக்கைகளும், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 200 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றில் படுக்கைகள் அமைக்கும் பணி நேற்று நடந்தது. பள்ளி வளாகத்தில் உள்ள கல்லுவீட்டில் கூட்ட அரங்கு, தரைதளம், மேல் தளம் உள்ளிட்டவற்றில் நேற்று 250 படுக்கைகள் அமைக்கப்பட்டன.

10 கழிப்பறைகள்

இவற்றில் 150 இரும்பு கட்டில்களும், 100 ஒயர் மடக்கு கட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கல்லுவீட்டில் கூட்ட அரங்கில் 25 படுக்கைகளும் (பெட்) அமைக்கப்பட்டுள்ளன. மற்ற கட்டில்களுக்கான படுக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வந்து சேரும் என்றும், அவற்றை நாளை (திங்கட்கிழமை) கட்டில்களில் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். மேலும் 4 வகுப்பறைகள் இருப்பதால் அவற்றிலும் 50 படுக்கைகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா நோயாளிகள் இங்கு தங்க வைக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான கழிப்பறைகள், குளியலறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே கழிப்பறை வசதிகள் உள்ளன. மாடியில் இருப்பவர்களுக்கு வசதியாக 2 வகுப்பறைகளை இணைத்து அதில் 10 கழிப்பறைகள் மற்றும் 2 குளியலறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நவீன கழிப்பறை

வயோதிகர்கள், நோயாளிகள் வசதிக்காக கழிப்பறைகளில் ‘வெஸ்டர்ன் டாய்லெட்“ கோப்பை வசதியுடன் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆகிய மையங்கள் நிரம்பியதும் எஸ்.எல்.பி. பள்ளி கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்