பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, நாகை மீன்பிடி துறைமுகத்தை மீனவர்கள் முற்றுகை- படகுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மீன்பிடி துறைமுகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். மேலும் படகுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-24 22:30 GMT
நாகப்பட்டினம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாகை மீன்பிடி துறைமுகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மீனவர்கள் கைகளில் கருப்புக்கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். தேசிய மீனவர் பேரவை துணை தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும். படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கான வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும். படகுகளுக்கான மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்கவேண்டும்.

மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையில் மத்திய, மாநில அரசுகள் அத்துமீறக்கூடாது. மீனவர்கள் வாழ்வாதாரம், கடல் வளம் ஆகியவற்றை அழிக்கும் முயற்சியை அரசுகள் கைவிட வேண்டும். மீன்பிடி தொழிலை முடக்கும் போக்கையும், மீனவர் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாங்கண்ணியை அடுத்துள்ள செருதூரில் மீனவர்கள் தங்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு செருதூர் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை குறைக்க கோரியும் போராட்டத்தில் கலந்துகொண்ட 80-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை நம்பியார் நகரில் படகுகளில் மீனவர்கள் மற்றும் பெண்கள் நின்று கொண்டு கைகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நம்பியார்நகர் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தியும், படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கான வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்