கொரோனா பாதித்த 22 நோயாளிகளிடம் இருந்து ரூ.24 லட்சம் வசூல் கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு - போலீஸ் ஐ.ஜி. ரூபா தகவல்

பெங்களூருவில் கொரோனா பாதித்த 22 நோயாளிகளிடம் இருந்து ரூ.24 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்கும்படி மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-25 23:19 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதையடுத்து, கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கை வசதிகளை ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, பணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஆனால் பெங்களூருவில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்கவும், 50 சதவீத படுக்கை வசதிகளை ஒதுக்குகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, பெங்களூருவில் 22 கொரோனா நோயாளிகளிடம் இருந்து ரூ.24 லட்சம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. ரூபா நிருபர்களிடம் கூறியதாவது;-

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற நோயாளிகளின் குடும்பத்தினரை அழைத்து ஆலோசித்தேன். அப்போது 22 நோயாளிகளிடம் இருந்து ரூ.24 லட்சம் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கொரோனா நோயாளிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது, 50 சதவீத படுக்கை வசதிகள் ஒதுக்காதது குறித்து புகார்கள் வந்ததால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்