ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.;
பொள்ளாச்சி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
ஆழியாறு அணை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் அணை நிரம்பியது.
நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு போதிய மழை பொழிவு இல்லாமல் நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் அப்பர் ஆழியாறில் இருந்து ஆழியாறுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து வேட்டைக்காரன்புதூர் கால்வாய், மதகு, மின் உற்பத்தி நிலையம் வழியாகவும், பிற மதகுகள் வழியாகவும் சேர்த்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் படிப்படியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
மழை அளவு
பொள்ளாச்சி பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-
சோலையார் 6, பரம்பிக்குளம் 6, ஆழியாறு 2.1, திருமூர்த்தி 4, அமராவதி 5, வால்பாறை 5, மேல்நீராறு 11, கீழ்நீராறு 10, காடம்பாறை 3, சர்க்கார்பதி 1, மணக்கடவு 12, தூணக்கடவு 5, பெருவாரிபள்ளம் 4, அப்பர் ஆழியாறு 3, நவமலை 2, பொள்ளாச்சி 2.5, நல்லாறு 4, நெகமம் 17, சுல்தான்பேட்டை 9 என பதிவாகி இருந்தது.