5 மாத பெண் குழந்தையை கடத்திய புரோக்கர்கள் உள்பட 3 பேர் கைது
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தை கடத்தி ரூ.90 ஆயிரத்திற்கு விற்க முயன்ற புரோக்கர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.;
கோவை
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தை கடத்தி ரூ.90 ஆயிரத்திற்கு விற்க முயன்ற புரோக்கர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண் குழந்தை கடத்தல்
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). பழைய துணி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். இவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பஸ்நிலையத்தில் தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி மணிகண்டன் உணவுக்காக வெளியே உதவி கேட்டு சென்றிருந்தார். சங்கீதா குழந்தைகளை கவனித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 2 பேர் குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்கும்படி சங்கீதாவிடம் பணம் கொடுத்து உள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் உணவு வாங்க சென்ற நேரத்தில், ஒருவர் 5 மாத பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு, தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குழந்தையை மீட்ட தனிப்படை
இந்த நிலையில் குழந்தையை மீட்க பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அந்த குழந்தையை ரூ.90 ஆயிரத்திற்கு ஆனைமலை அங்காளகுறிச்சியில் உள்ள முத்துபாண்டி என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
இதுகுறித்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஆனைமலை அருகே உள்ள அங்காளகுறிச்சியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 51). இவருக்கு திருமணமாகி கடந்த 30 ஆண் டுகளாக குழந்தை இல்லை. இதனால் அவர் ஒரு குழந்தையை வாங்கி வளர்க்க விரும்பி உள்ளார். இதையடுத்து அவர், புரோக்கர்களான ஆனைமலையை சேர்ந்த ராமர் (49), சேத்துமடையை சேர்ந்த முருகேசன் (39) ஆகியோரை அணுகி உள்ளார். அவர்களிடம் ஒரு குழந்தையை கடத்தி வந்து தந்தால் ரூ.90 ஆயிரம் தருவதாக கூறியதுடன், முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்து உள்ளார்.
3 பேர் கைது
பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும் ஒரு குழந்தையை கடத்த திட்டமிட்டு உள்ளனர். அப்போது சங்கீதாவை பார்த்து உள்ளனர். அவரிடம் 5 மாத குழந்தை இருப்பதை பார்த்து அதனை கடத்த திட்டமிட்டனர். இதையடுத்து சம்பவத்தன்று சங்கீதாவிடம் பணத்தை கொடுத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அவர் சென்றதும், இவர்கள் இருவரும் அங்கிருந்த 5 மாத பெண் குழந்தையை கடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். பின்னர் அந்த குழந்தையை அவர்கள், முத்துபாண்டியிடம் கொடுத்து உள்ளனர். இதையடுத்து முத்துபாண்டி அவர்களிடம் ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்து உள்ளார்.
போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 தனிப்படையினர் முத்துபாண்டி வீட்டில் இருந்த 5 மாத பெண் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை கடத்திய ராமர், முருகேசன், முத்துபாண்டி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.