மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் எப்போது? மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி பதில்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி கூறினார்.

Update: 2019-12-02 23:45 GMT
சென்னை,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பை நேற்று வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி, நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும்?

பதில்:- இன்றைக்கு ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. விரைவில் நகர்ப்புறங்களுக்கும்(மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

கேள்வி:- 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பின்போது, கிராமப்புறத்திற்கும், நகர்ப்புறத்திற்கும் சேர்ந்துதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இப்போது மாற்றம் செய்யப்பட என்ன காரணம்?.

பதில்:- நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பின்னர் கட்டாயமாக நகர்ப்புறத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்படும்.

வார்டு வரையறை பற்றி சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதை பொறுத்தவரைக்கும், ‘வார்டு வரைமுறை சட்டம்-2017’ 21-7-2018 அன்று பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையரை தலைவராகவும், ஊராட்சி துறை இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சி இயக்குநர், பேரூர், நகர, சென்னை மாநகராட்சி ஆணையர், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கொண்ட உறுப்பினர் குழு ஒன்றை அரசு அமைத்து ஆணையிட்டது. வார்டு மறுவரையறை பணிகள் மாவட்ட அளவில் முடிக்கப்பட்டு, மாவட்ட வார்டு வரையறை அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால் முன்வடிவு தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளுடைய கருத்து மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு, இந்த குழுவால் மாநிலம் முழுவதும் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7 இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த கூட்டம் 23-1-2018 அன்று வேலூரிலும், 24-1-2018 அன்று சென்னையை அடுத்த மறைமலைநகரிலும், 29-1-2018 அன்று திருச்சியிலும், 1-2-2018 அன்று கோவையிலும், 6-2-2018 அன்று மதுரையிலும், 8-2-2018 அன்று தூத்துக்குடியிலும், 10-2-2018 அன்று சேலத்திலும், 8-3-2018 அன்று சென்னையிலும் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது, நாளிதழ்களில் முறையாக அறிவிப்பு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து அரசியல் கட்சி மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை கவனமுடன் பரிசீலித்து, இந்த கூட்டங்களின் வாயிலாக பெறப்பட்ட 19,547 மனுக்களில், 7,785 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதர மனுக்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்கப்பட்டு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி:- புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் என்ன?.

பதில்:- புதிய மாவட்டங்களை பொறுத்தவரை, இதற்காக வழங்கப்பட்ட அரசாணையிலேயே நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கான வார்டு வரையறை பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதாலும், சுப்ரீம் கோர்ட்டு ஆணை ஏற்கனவே உள்ளதாலும், இந்த உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி நடத்தப்படும் என்றும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு வரையறை போன்ற ஏதாவது பணிகள் தேவைப்படின், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர், அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசாணையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

கேள்வி:- நகர்ப்புற தேர்தலை தற்போது நடத்தாமல் தள்ளிவைப்பதற்கான காரணம் என்ன?.

பதில்:- நிர்வாக அடிப்படையில் முதற்கட்டமாக இதை வெளியிட்டிருக்கிறோம். விரைவில் அதற்கும் தேர்தல் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும்.

கேள்வி:- 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏதோ காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணங்கள் இப்போது சரிசெய்யப்பட்டுள்ளதா?.

பதில்:- 2016-ம் ஆண்டு வார்டு வரையறை, மற்ற செயல்களுக்காக தடை செய்யப்பட்டது. வார்டு வரையறை முடிக்கப்பட்டதால் தற்போது அறிவிக்கிறோம்.

கேள்வி:- தி.மு.க. அளித்த புகார்கள் தொடர்பாக வார்டு வரையறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?.

பதில்:- வார்டு வரையறை கூட்டத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டு தான் கருத்து தெரிவித்தார்கள். அதையும் பரிசீலித்துத்தான் உரிய ஆணை வழங்கப்பட்டது.

கேள்வி:- ஊராட்சிகளில் சாதி வாரி ஒதுக்கீடு பணி இன்னும் முடிவடையவில்லை, அது தொடர்பான அறிவிப்பணை இன்னும் வெளியிடவே இல்லை என்று ஊராட்சி அமைப்புகளில் இருந்து புகார்கள் வருகின்றனவே?

பதில்:- ஏற்கனவே நான் கூறியபடி, வார்டுகளின் எல்லைகள் எதுவும் மாற்றப்படவில்லை. மொத்தம் உள்ள வார்டுகள் எண்ணிக்கை அப்படியேத்தான் உள்ளது. இது இடஒதுக்கீடு பொறுத்தவரைதான். ஆனால், மக்கள்தொகை அடிப்படையில், வார்டுகளில் உள்ள தெருக்களை மறுவரையறை செய்து, அதற்காக நியமிக்கப்பட்ட குழு அரசுக்கு அனுப்பி, அரசாணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டிற்கு உள்ள ஆணையும் கடந்த மே மாதம் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இது அரசாணையில் உள்ளது.

கேள்வி:- மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவருக்கான இடஒதுக்கீட்டு அறிவிப்பை எப்போது எதிர்பார்க்கலாம்?.

பதில்:- விரைவில் எதிர்பார்க்கலாம்.

கேள்வி:- 15 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாததற்கு என்ன காரணம்?.

பதில்:- நிர்வாக காரணங்களுக்காக இப்போது அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு?.

பதில்:- 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே அரசாணையிலேயே உள்ளது.

கேள்வி:- மேயர் போன்ற பதவிகளுக்கு இன்னும் இட ஒதுக்கீடு வெளியிடாமல் இருப்பது, நீதிமன்றத்தில் தடை கேட்க வாய்ப்பாக அமையாதா?.

பதில்:- நகர்ப்புறத்திற்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஊரகப் பகுதிகளுக்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கும் அறிவிக்கப்படும்.

கேள்வி:- பதற்றமான வாக்குசாவடிகள் எத்தனை உள்ளன?.

பதில்:- ஏற்கனவே ஒரு பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறது. விரைவில் அதன் எண்ணிக்கை மாறுவதால், அதை இன்று நாங்கள் கொடுக்கவில்லை. மாவட்ட கலெக்டரும், மாவட்ட கண்காணிப்பு ஆணையரும் இணைந்து கணக்கிட்டு விரைவில் கொடுப்பார்கள்.

கேள்வி:- அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதா?.

பதில்:- இயன்ற அளவு பரிசீலித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்