அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு :ரூ.1.50 கோடி பறிமுதல்

ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

Update: 2019-04-17 01:01 GMT
தேனி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள  அ.ம.மு.க. அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் சோதனை நடத்தினர். விடிய விடிய இந்த சோதனை நடைபெற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வருமான வரித்துறை சோதனையை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இன்று அதிகாலை 5.30 மணியளவில் வருமான வரித்துறையின் சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் இந்த பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பணம் வைத்திருந்ததாக அமமுக மாவட்ட துணைச்செயலாளர் பழனி, கமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல்,  தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தங்கியிருந்த வீட்டிலும் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனிமொழி வீட்டில் நடைபெற்ற சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்