அரசியல் ஆதாயத்துக்காக சொந்த மனைவியையே கைவிட்டார் மோடி: மாயாவதி கடும் தாக்கு

அரசியல் ஆதாயத்துக்காக சொந்த மனைவியையே கைவிட்டார் மோடி என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கடுமையாக சாடினார்.

Update: 2019-05-13 07:48 GMT
லக்னோ,

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் கண்ணெதிரே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது. இந்த சம்பவம் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது. இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து  சமூக வலைதளங்களிலும் அவர்கள் அதனை பதிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 30ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மே 7ம் தேதிதான் வழக்குப் பதிவு செய்தனர். ஏப்ரல் 29 மற்றும் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற்றதால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது

இதற்கு மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அண்மையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில் இதை சுட்டிக்காட்டி  பேசினார். அப்போது அவர்,''தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளார். அம்மாநில காவல்துறையும் மாநில அரசும் இந்த தவறை தடுக்க தவறி விட்டது. மற்ற பல மாநிலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தபோது ஆவேசமாக பேசியவர்கள் இப்போது ஏன் அமைதியாகி விட்டார்கள். அவர்கள் பின்னணி என்ன?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்  மாயாவதி, ''அல்வார் கூட்டு பலாத்கார வழக்கில், இத்தனை நாட்களாக மோடி அமைதியாக இருந்தார். இப்போது தேர்தல் வந்ததும் அதைப் பற்றி பேசுகிறார். இதன்மூலம் அவர் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார். இதன்மூலம் தேர்தலில் அவரின் கட்சிக்கு நன்மைகள் கிடைக்கும். இது மிகவும் அவமானகரமானது. அரசியல் ஆதாயங்களுக்காக அவரின் சொந்த மனைவியையே கைவிட்டவர். மற்றவர்களின் சகோதரிகளையும், மனைவிகளையும் எப்படி மதிப்பார்” என்று கடுமையாக சாடினார். 

மேலும் செய்திகள்